“மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மாயம்...” குப்பை கிடங்காக மாறிய சென்னை நகரம் - தொற்றுநோய் பீதியில் வாழும் மக்கள்

First Published Dec 20, 2016, 11:35 AM IST
Highlights


கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் இதுவரை விடுபடாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சென்னை நகரில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி குறுக்கு தெருக்களிலும், சிறிய சந்துகளிலும் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் மின்சாரம் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.   மாநகராட்சி துப்புரவு ஊழியர்களை தெரு பக்கமே பார்க்க முடியவில்லை. எங்கே மாயமானார்கள் என்றே தெரியவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுன்றனர். புயல் ஓய்ந்து ஒரு வாரம் ஆகியும், துப்புரவு பணிகள் இதுவரை நடக்காமல் இருக்கிறது.

சூறைக்காற்றில் சாலைகளில் விழுந்த மரங்களும் குறைந்த அளவே அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக முக்கிய சாலைகளிலும், விஐபிகள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே துப்புரவு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

ஆனால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், தெருக்கள் பக்கம் இன்னும் மாநகராட்சி ஊழியர்கள் எட்டிப்பார்க்காமல் உள்ளதால், கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் பலர் தங்கள் சொந்த பணத்தில் வீடுகளில் சாய்ந்த மரங்களை அகற்றி வருகின்றனர். 

தெருக்கள் முழுவதும் காடுகளை போன்று காட்சியளிக்கிறது. குறிப்பாக மரக்கழிவுகள் அள்ளும் பணியில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற யாரும் வரவில்லை.

கடந்த ஒரு வாரமாக அப்படியே தேங்கி கிடப்பதால் சென்னையில் உள்ள தெருக்கள் அனைத்திலும் மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.  இதுதொடர்பாக, மாநகராட்சியில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பெய்த மழையில் நனைந்து, குப்பைகள் குவிந்து கிடப்பதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பலவேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள், தினமும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மின்சாரம் விநியோகம் சரியாகாததால் பொதுமக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். மின்சாரம் இல்லாததால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரை தேடி தெருத்தெருவாக அலையும் மக்களின் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகருக்குள் 2, 3 நாட்களில் மின்சாரம் வந்துவிட்டாலும் புறநகர் பகுதிகள் மின்சாரம் இல்லாமல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தேவையான மின் கம்பங்கள் இல்லாததால் தான் மின் விநியோகம் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

 வெளிமாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளில் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை.

‘மின்சாரம் இல்லாமல் ஒருவாரத்தை எப்படியோ சமாளித்துவிட்டோம். இன்னும் ஒருவாரம் கரன்ட் இல்லாமல் போனால் எங்கள் நிலைமை என்ன ஆகும்’ என்று மின் வாரிய அலுவலகங்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

குப்பைகளை அகற்றி தொற்று நோய் பரவுவதையும், மின்சாரம் இல்லாமல் சீரழியும் புறநகர் பகுதிகளில் தனி கவனம் செலுத்தி மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

click me!