2வது நாளாக தொடரும் ரெய்டு : சுரங்க அறையில் பதுக்கிய ரூ.10 கோடி பறிமுதல்

 
Published : Dec 20, 2016, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
2வது நாளாக தொடரும் ரெய்டு : சுரங்க அறையில் பதுக்கிய ரூ.10 கோடி பறிமுதல்

சுருக்கம்

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக் கடையில் வருமான வரித்துறையினர் நேற்ற நடத்திய அதிரடி சோதனையின்போது, சுரங்க அறையில் பதுக்கி வைத்த கணக்கில் காட்டாத புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.10 கோடி, கடையின் உரிமையாளர் வீட்டில் 6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்குதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகளும், கடந்த சில நாட்களுக்கு முன் 500 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. அவை போதிய அளவுக்கு பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் தினமும் அதிகாலை முதல் வங்கிகள், ஏடிஎம்கள் முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

இதற்கிடையில் பிரபல தொழிலதிபர்கள் பலர் 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏராளமானோர் சிக்கினர். கோடிக் கணக்கில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையொட்டி சிபிஐயும் வருமான வரித்துறையும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை நகரின் மையப் பகுதியான சவுகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் ஏராளமான நகைக் கடைகள், முக்கிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள பெருமாள் முதலி தெருவில் தீபக் என்பவருக்கு சொந்தமான தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் மற்றும் புடவை அலங்கார சாதனம் விற்கும் மொத்த விற்பனை கடை உள்ளது.

இங்கே நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  சுமார் 3 மணி நேரம் நடத்திய சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் பழைய 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அங்கிருந்த சுரங்க அறையில் பதுக்கிவைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பெரிய பெரிய அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றனர். கணக்கில் வராத இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

மேலும் புரசைவாக்கம் அருகே வேப்பேரியில் உள்ள கடை உரிமையாளரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கே கணக்கில் வராத 6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடையில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேபோல், என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள இரானி என்பவரது நகைக்கடை மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த தொடர் சோதனையால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் குறித்து வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, தீபக்கின் நகைக்கடையில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் கைப்பற்றியிருந்தனர். தற்போது மீண்டும் சோதனை நடந்துள்ளது.

இதைதொடர்ந்து இன்றும் தீபக் மற்றும் இரானி ஆகியோர் கடை மற்றும் வீடுகள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும், கடைகளிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இதிலும் பல கோடி பணம், நகை, ஆவணங்கள் சிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி