காய்ந்த பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் பாய்ச்சியவருக்கு துப்பாக்கிச்சூடு, அரிவாள் வெட்டு…

First Published Dec 20, 2016, 11:05 AM IST
Highlights



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே நீரின்றி கார்ய்ந்த பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் பாய்ச்சியவரை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த நான்கு பேரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை அருகேயுள்ள த.கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐய்யாறு (52). இவர் ஒரு விவசாயி. இவருக்கு, அதே பகுதியில் ராமன் கோட்டகம் ஏரி புறக்கரையில் சாகுபடி நிலம் உள்ளது. இந்த ஏரியை ரவிச்சந்திரன் தரப்பினர் தொடர்ந்து ஊராட்சியில் ஏலம் எடுத்து வந்தனர்.

நிகழாண்டு, அந்த ஏரி இன்னும் ஊராட்சித் தரப்பில் ஏலம் விடப்படவில்லை. நீரின்றி காய்ந்த பயிர்களைக் காப்பாற்ற அருகேயிருந்த தம்பிக்கோட்டை ராமன்கோட்டகம் ஏரியிலிருந்து பம்பு செட் மூலமாக தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஐய்யாறு தரப்பினர் நேற்று ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கு அந்த ஏரியை முன்பு குத்தகைக்கு எடுத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், இரட்டைக்குழல் துப்பாக்கியால் சுட்டதில் ஐய்யாறு தரப்பைச் சேர்ந்த ஐய்யாறு, சத்தியராஜ் (30) இருவரும் காயமடைந்தனர்.

மேலும், ரவிச்சந்திரனுடன் வந்த சிலர் அரிவாளால் வெட்டியதில் ஐய்யாறு தம்பி அண்ணாதுரை (48), திருமுருகன் (எ) செல்வேந்திரன் (36) இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்த 4 பேரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.அருண், ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் சரணடைந்தார்.

 

click me!