500-க்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்…

First Published Dec 20, 2016, 10:40 AM IST
Highlights


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் கிடைக்கவில்லை. பணப் பரிவர்த்தனை செய்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையால் பீடி உற்பத்தித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் 3 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை ஒன்றியம், பாலாமடை ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக வேலை வழங்கவில்லை; பணி செய்த மூன்று மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் களக்காடு ஒன்றியம், படலையார்குளம் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடையம் ஒன்றியம், பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றாகத் திரண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி. பெரும்படையார், பீடித் தொழிலாளர் சங்கத் தலைவர் சடையப்பன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெரும்படையார் கூறியது: “நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. விவசாயப் பணிகள் நடைபெறாததால் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாப்பான்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை. வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் கிடைக்கவில்லை. பணப் பரிவர்த்தனை செய்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையால் பீடி உற்பத்தி இல்லை. இதனால் பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கார் பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

click me!