
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஓய்வறை வசதியை நிறைவேற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறையுடன் கூடிய நவீன ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமைய உள்ள ஓய்வறைகளில் பல்வேறு வசதிகள் இருக்கும். ஒவ்வொரு ஓய்வறையும் சுமார் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்.
பணியாளர்கள் உடை மாற்றிக்கொள்ளத் தனி அறை, நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் அமர்ந்து ஓய்வெடுக்கப் போதுமான இடவசதி ஆகியவை இதில் இடம்பெறும்.
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படுவதால், பணியாளர்கள் தங்களின் பணி முடித்த பிறகு அல்லது இடைவேளை நேரத்தில் சிரமமின்றி ஓய்வெடுக்க முடியும்.
ஏற்கனவே சென்னையில் உள்ள சுமார் 31,000 தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளைச் சுழற்சி முறையில் இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த ஓய்வறை கட்டும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. "தூய்மைப் பணியாளர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கம்" என்று முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.