கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே மாத்திரைகள் வழங்கப்படும்.. சென்னை மாநகராட்சி அதிரடி..

By Thanalakshmi VFirst Published Jan 15, 2022, 7:21 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

சென்னை மாநகராட்சி சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை குறித்து பல்வேறு நடைமுறைகள் தற்பொழுது பின்பற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர்புற சமுதாய நல மருத்துவமனைகளில் தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவிற்காக காத்திருக்கும் நபர்கள் வீடுகளில் இருக்கும் நேரங்களில் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், தொற்று பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு மாநகராட்சியால் நாளை முதல் வழங்கப்படவுள்ளது.

இந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி , ஜின்க் , பாராசிட்டமால் ஆகிய மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் போன்ற மருத்துவப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் (azithromycin) போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும்.

எனவே கோவிட் தோற்று அறிகுறிகளுடன் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவிற்காக காத்திருக்கும் நபர்கள் தொற்று பிறருக்கு பரவுதலை தடுக்கும் வகையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாநகராட்சியால் வழங்கப்படும் மருந்து தொகுப்பிலுள்ள மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மாநகராட்சியின் தொலைபேசி ஆலோசனை மையங்களில் ஆலோசனை பெற்று முறையாக எடுத்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!