தெருக்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கம்.. சிங்கார சென்னை 2.0 கீழ் மாநகராட்சி நடவடிக்கை..

By Thanalakshmi VFirst Published May 29, 2022, 9:55 AM IST
Highlights

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் தெரு பெயரில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம் செய்யும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியிலுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள பெயர் பலகைகளை மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்துவருகிறது. அதன் படி, சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெயர் பலகையில் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் சுமார் ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர் பலகையில் பொறிக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்கம் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை மாநகராட்சி மாற்றியமைத்துள்ளது. 13-வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவோ கிராமணி 2-வது தெரு என்று பெயர் இருந்தது. இந்தப் பெயரை மாற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் பெயரை மாற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்தச் சாலைகளின் பெயர் அப்பாவு (கி) தெரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: சமைக்கும் போது துர்நாற்றம்... கெட்டுப் போன இறைச்சியால் நிறுத்தப்பட்ட திருமணம்...!

click me!