ஆட்டோவில் வந்த வடமாநில பயணிக்கு மாரடைப்பு... ஆர்சி புக்கை அடகு வைத்து உயிரைக் காப்பாற்றிய சென்னை ஆட்டோக்காரர்

Published : Apr 05, 2023, 02:04 PM IST
ஆட்டோவில் வந்த வடமாநில பயணிக்கு மாரடைப்பு... ஆர்சி புக்கை அடகு வைத்து உயிரைக் காப்பாற்றிய சென்னை ஆட்டோக்காரர்

சுருக்கம்

சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை ஆட்டோக்காரர் ஒருவர் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரவி என்கின்ற ரவிச்சந்திரன், இவர் சென்னையில் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஒட்டிவருகிறார். பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவரான ரவி, ஆட்டோ ஓட்டுனர் என்பதால் சென்னைக்கு வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளுடன் பேசி பேசி இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை கொஞ்சம் கொஞ்சம் பேச கற்றுக்கொண்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுனர் ரவி செய்த மனிதநேயமிக்க செயல் தான் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அப்படி அவர் என்ன செய்தார் என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.

கொல்கத்தாவை சேர்ந்த சங்கரதாஸ் (வயது 52) எனபவர் தொழில் நிமித்தமாக சென்னைக்கு வந்துள்ளார். அப்போ சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். சங்கரதாஸுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. இதனால் ரவியிடம் இந்தியிலேயே பேசி தான் போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்த சங்கரதாஸுக்கு திடீர் என பேச்சு தடைபட்டு, கண் இருண்டு போய், வேர்த்து கொட்டியதும் அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்திருக்கிறார் சங்கரதாஸ்.

வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என நினைத்த ரவி கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சங்கரதாஸை கொண்டு சென்றார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகச்சொல்லியுள்ளார்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லாததால், அவர்கள் சங்கரதாஸை உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுப்பிவைத்தனர். இதனால் ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தனது உடம்பில் தாங்கிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளார் ரவி.

மருத்துவமனையில் சங்கரதாசை பரிசோதித்த டாக்டர்கள் இன்னும் 5 நிமிஷம் லேட்டா வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்க முடியாது, ஆனாலும் அவரது உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது என்று கூறியதோடு உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் அதற்காக 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தவேண்டும், அந்த கருவி இல்லாவிட்டால் அவரை உயிர்பிழைக்க முடியாது என்று கூறி உள்ளனர்.

சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கொல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போன் போட்டுள்ளார் ரவி. அப்போது தான் சங்கரதாஸின் குடும்பம் சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத ஒரு ஏழ்மையான குடும்பம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தானே செலவு செய்ய முடிவெடுத்த ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோவின் ஆர்சி புக்கை அடமானம் வைத்து 30,000 ரூபாய் திரட்டியதோடு, நண்பரிடம் 27 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று மொத்தம் 57 ஆயிரம் ரூபாயை டாக்டர்களிடம் கொடுத்து, நம்ம தமிழ்நாட்டை நம்பிவந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு ஒரு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது டாக்டர், இந்தாங்க என்னால புரட்ட முடிஞ்சது 57 ஆயிரம் ரூபாய் தான் என சொல்லி கொடுத்துள்ளார்.

சொந்த ஆட்டோவை அடமானம் வச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே? இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவரானு டாக்டர்கள் கேட்க, இவரு யாருன்னே எனக்கு தெரியாது, என் ஆட்டோவுல வந்தவரு, என்னை காப்பத்துங்கன்னு கேட்டு என் தோள்ல சாஞ்ச சக மனுஷன்னு ரவி சொன்னதும் வியந்து போன டாக்டர்கள், பேஸ் மேக்கர் கருவி வாங்க தேவைப்பட்ட எஞ்சியுள்ள பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி அந்த கருவியின் உதவியுடன் மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை நடத்தி முடித்தனர்.

இதையும் படியுங்கள்... Watch : பேருந்து ஓட்டத் தெரியாமல் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எம்எல்ஏ! அலரியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!

இவையெல்லாம் நடக்க பத்து நாட்களாகிவிட்டது இந்த 10 நாட்களும் சங்கரதாசிற்கு தானே காப்பாளராக இருந்து அவரை வார்டு வார்டாக கூட்டிச் சென்று, மருத்துவ பரிசோனைகளுக்கு உட்படுத்துவது, அவரை படுக்கவைப்பது, சாப்பிடவைப்பது, நேரநேரத்திற்கு மருந்து கொடுப்பது என தன் உடன்பிறந்தவர் போன்று பார்த்துக்கொண்டாராம் ரவி.

பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக்கொண்டு, இரவில் ஆட்டோ ஒட்டி அந்த வருமானத்தை வீட்டுக்கு கொடுத்துவிடுவாராம். இப்படியே இருபது நாட்கள் சங்கரதாசை கண்ணும் கருத்துமாக பார்த்து அவரை நன்கு குணப்படுத்திவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் உள்ள மூன்று கோவில்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ரவி. ஏனெனில் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டி இருந்தாராம் ரவி.

பின்னர் சங்கரதாசை நல்லபடியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் வழியனுப்ப வந்த போது, ரவி செய்த இந்த பேருதவியை பார்த்து சங்கரதாஸுக்கு பேச்சே வரவில்லையாம். ரவியை கட்டித் தழுவி கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் சங்கரதாஸ். சங்கரதாஸை பார்த்துக்கொண்டதன் காரணமாக 20 நாட்களாக ஆட்டோ ஸ்டாண்ட் பக்கமே செல்லாமல் இருந்த ரவி, 20 நாட்களுக்கு பின் அங்கு சென்றதும் அங்கிருந்த அவரது நண்பர்கள் என்ன நடந்தது என கேட்டுள்ளனர். பின்னர் சங்கரதாஸை நடந்ததை விவரித்துள்ளார்.

என்னப்பா இவ்வளவு பெரிய விஷயம் செஞ்சுருக்க இது நாலு பேருக்கு தெரிய வேண்டாமா எனக்கூறி தனக்கு தெரிந்த ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார். இதையடுத்து ரவியை தொடர்புகொண்ட எடிட்டர் மோகன் தன் பங்கிற்கு அவர் அடகு வைத்த ஆட்டோஆர்சி புக்கை மீட்டுக்கொடுத்திருக்கிறார். இதே போல அடுத்தடுத்து பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வர, அதெல்லாம் வேண்டவே வேண்டாம், நான் ஒரு மனிதனாக தன் கடமையை செய்தேன். அதற்கு எதற்கு வெகுமதி பாராட்டு எல்லாம் என்றுகூறிவிட்டு தன் ஆட்டோவை எடுத்து சவாரிக்கு சென்றுவிட்டாராம் இந்த மனிதநேயமிக்க மனிதன்.

இதையும் படியுங்கள்... ஏப்.1 முதல் அமலுக்கு வந்தது மின்கட்டண உயர்வு... அறிவிப்பை வெளியிட்டது புதுவை மின்துறை!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்று ரவுண்ட் கட்டி அடிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் குளு குளு அப்டேட்!
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!