மழை வந்துச்சு..கொட்டுச்சு...போச்சு...ரீப்பீட்டு...! "மாநாடு" ஸ்டைலில் சென்னையை போட்டு தாக்கும் கனமழை....!

By Raghupati RFirst Published Nov 28, 2021, 7:11 AM IST
Highlights

மழை வந்துச்சு,கொட்டுச்சு,போச்சு, மறுபடியும் ரீப்பீட்டு என மாநாடு பீவரில் இருக்கிறது சென்னை.

சென்னை கடந்த 2015 மழை  வெள்ளத்தை விட, தற்போது அதிக மழை பெய்ந்துள்ளதால், ஒட்டு மொத்த சென்னையும் தற்போது தள்ளாடி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஆவடி 20 செ.மீ., மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யூர் தலா 18 செ.மீ., கட்டப்பாக்கம் 17 செ.மீ., திருக்கழுக்குன்றம் 16 செ.மீ., மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டை தலா 15 செ.மீ., திருவள்ளூர் 13 செ.மீ., காஞ்சீபுரம், செம்பரம்பாக்கம், பொன்னேரி, தாம்பரம், அம்பத்தூர் தலா 12 செ.மீ., சிதம்பரம், கொரட்டூர், திருப்போரூர், செங்குன்றம் தலா 11 செ.மீ., கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம் தலா 10 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.இன்றும் இது அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 34 செ.மீ. மழை பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் இயல்பை விட 74 சதவீதம் அதிகமாக 60 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வசித்து வருவோர்களின் பெரும்பாலானோர் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து இயல்புநிலை பாதித்துள்ளது. இவர்களுக்கான நிவாரண பணிகளும் தொய்வில் இருப்பதாகவே தெரிகிறது.இதுமட்டுமின்றி, சென்னையில் கிட்டத்தட்ட சுமார் பதினைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடின்றி, சாலையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் மழையால் சாலைகள் எல்லாம் ஆறுகளாக மாற, சாலையோரம் வசிக்கும் மக்களில் பலர் இருக்கவே இடம் தேடி அலையும் அவல நிலை உருவாகியுள்ளது.சாலையோரம் வசிப்பவர்களில் மிகப்பெரும்பாலோர் தினக்கூலிகளே. மழை காரணமாக கிடைத்த சொற்ப வருமானத்திற்கும் வழியின்றி போய்விட்டது. அடிப்படை தேவைகளான உணவு, உறைவிடம், வருமானம் இன்றி தவித்துக்கிடக்கும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமும், அடிப்படை வாழ்வாதாரத்திற்கான வேலையையும் உறுதிப்படுத்துவதே தீர்வாக அமையும்.அரசு இவர்களை கண்டுகொள்ளுமா ? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. 

 

click me!