எத்தனை "ஜெய்பீம்" வந்தாலும் நீங்க திருந்த மாட்டீங்க.. அரசு அதிகாரிகளை பொளந்து கட்டும் சமூக ஆர்வலர்கள் !!

By Raghupati RFirst Published Mar 20, 2022, 11:30 AM IST
Highlights

சாதி சான்றுக்காக தொடர்ந்து போராடி வரும் வீராபுரம் இருளர் மக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அலைக் கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இருளர் குடியிருப்பு :

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வேல்டு சிட்டி அருகில் உள்ள வீராபுரம் ஊராட்சி இருளர் குடியிருப்பில் 34 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் செங்கல் சூளை, மரம் வெட்டுதல் உள்ளிட்ட கூலி வேலைகள் செய்து வருகின்றனர். மேலும் சிலர் மகேந்திரா வேல்டு சிட்டியில் அமைந்துள்ள குடியிருப்புகளிலும், தொழிற்சாலைகளிலும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களில் 6 பேரின் வீடுகளுக்கு மட்டுமே பட்டா உள்ளது. மற்றவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்படவில்லை. அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு, வருமான வரி அடையாள அட்டை (பான் அட்டை) மருத்துவ காப்பீடு அட்டை, உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை இவர்கள் வைத்துள்ளனர். ஆனால் சாதிச்சான்று வழங்கப்படவில்லை. 

சாதிச்சான்று மறுப்பு :

இக்குடியிருப்பில் 56 மாணவ-மாணவிகள் அரசுப் பள்ளியில் பயின்ற வருகின்றனர் இது மட்டுமின்றி 3 மாணவிகள் மேல்நிலை படிப்பை முடித்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு அரசு சாதிச்சான்று வழங்க மறுத்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், 'மூன்றாவது தலைமுறையாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுக்கின்றனர்.  

பலமுறை சாதிச்சான்று கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக நாங்கள் இருளர் இனம் என்பதற்கு ஆதாரத்தை கேட்கின்றனர். நாங்கள் எந்த ஆதாரத்தை காட்டுவது என்று தெரியவில்லை. 12ஆம் வகுப்பு படித்துவிட்டு இனச்சான்று இல்லாமல் எந்த வேலைக்கும் போக முடியாமலும் மேல் படிப்பும் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். படித்தும் கூலி வேலை செய்யும் நிலை உள்ளது என்றனர். 

இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் கேட்ட போது, 'மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து அதனடிப்படையில் அவர்களுக்கு இருளர் சான்று வழங்கலாம்.  கடந்த பொது முடக்கத்திற்கு முன் அவ்வாறு இனச்சான்று வழங்க உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொதுமுடக்கம் போடப் பட்டஉடன் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டன. 

மீண்டும் அவர்கள் விண்ணப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது' என தெரிவித்தனர். ஒரு இனத்தை சேர்ந்தவர்களுக்கு சாதிச்சான்று தருவது அரசின் கடமையாகும். அதனை இன்னும் எத்தனை ஆண்டு காலம் அரசு அதிகாரிகள் தான் கண்டுகொள்ளாமல் இருப்பார்களோ ? என்று கேள்விகளை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

click me!