கூவம் நதியின் அவல நிலை - ரசாயன கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்!!

First Published May 24, 2017, 10:12 AM IST
Highlights
chemical wastage in cooum river chennai


சென்னை திருவான்மியூர் அருகே கூவம் நதியில் ரசாயன கலவைகள் கலக்கப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள், பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 தென்சென்னை பகுதியில் கிண்டி, ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, நாகல்கேணி, சைதாப்பேட்டை, புறநகர் பகுதியான கேளம்பாக்கம், சிறுசேரி ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக மறு சுழற்சிக்கு அனுப்பப்படுவதில்லை என புகார் எழுந்து வருகிறது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரியம், சுகாதார துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மேற்கண்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கூவம் ஆறு வழியாக நீலங்கரை கடலில் கலக்கிறது. இவ்வாறு செல்லும் கழிவுநீரில், ரசாயனங்கள் கலந்து செல்வதால், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே, கடலில் கழிவு நீர் கலப்பதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதனை எந்த தொழிற்சாலைகளும் பின்பற்றுவதில்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாததால், ரசாயன கலவைகள் கலந்து, கடலில் கலக்கிறது.

பல ஆண்டுகளாக தண்ணீரில் ரசாயன கலவைகளை கலந்து வெளியேற்றப்படுவதால் காற்றில் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சுவாசிப்பதால் தங்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி உள்பட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

click me!