
பெரம்பலூர்,
பெரம்பலூரில் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல்கால வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதியத்தை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்று மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் வட்ட தலைவர் ரெங்கசாமி தலைமையில், துறைமங்கலம் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய சட்டம் 2003–ன்படி தமிழக அரசால் மின்வாரியம் 3 கூறுகளாக பிரிக்கப்பட்டது. முந்தைய வாரியத்தின் சொத்துகள் மூன்று நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசின் உத்தரவாதத்துடன் கூடிய எரிசக்தி மூலம் ஓய்வூதியம் வழங்கிட மின்வாரியம் உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல்கால வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதியத்தை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.
பணிக்கொடை மற்றும் சேவைப்பணிக்கொடையை வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதியத்தின்கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பிடித்தம் செய்த தொகை, நிர்வாகத்தின் பங்களிப்பு தொகையை குறிப்பிட்டு கணக்கு பட்டியல் வழங்க வேண்டும்.
1982 – 83–ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த கணக்கீட்டாளர்களுக்கு பணிக்காலத்தைச் சேர்த்து உயர்வு நிலுவை தொகை பெறாதவர்களுக்கு உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில், வட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் முத்துசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகிகள் சிற்றம்பலம், அழகர்சாமி, மின்ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட செயலாளர் அகஸ்டியன், ஓய்வுபெற்றோர் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் முருகேசன், விரைவு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் சங்கம் சார்பில் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.