
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார். இதையொட்டி மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பணம், கள்ள நோட்டு ஒழியும் என கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.
சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.
இதையொட்டி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்ததால், பல முக்கிய பிரமுகர்கள், மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற ரூபாய் நோட்டுக்கள் வெளியாவதை தடுப்பதால், கருப்பு பண புழக்கம் தடுக்கப்படும் எனவும் கூறினர்.
இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்க்கப்படுகிறது. மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பு நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க பயன்படும். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முடக்கத்தால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் நடவடிக்கை தேவை என கூறியுள்ளார்.