மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழா
உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஏப்ரல்23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பத்கர்கள் மதுரையில் கூடுவார்கள் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த முறை போன்று எந்தவித விபத்தும் நடைபெறாமல் தடுக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையும், டாஸ்மாக் கடைகளை அடைக்கவும் உத்தவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது
மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்
இதனை தொடர்ந்து விழாவின் அடுத்தகட்டமாக இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. திருத்தேரோட்டத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல அவற்றை தொடர்ந்து முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றது. சுவாமி அம்மன் திருத்தேரை தொடர்ந்து இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வலம் வந்தது.
வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்
சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடைந்தது. திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் சங்கு முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணத்திற்காக மாசி வீதிகள் மின் இணைப்பு துண்டிப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றம்