Tamilnadu Rain : அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… எச்சரித்த வானிலை மையம்!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 2:16 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் சேலம், ஈரோடு ,நாமக்கல் ,திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில்,  அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். வரும் 6 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 7 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து,  வடக்கு ஆந்திரா ஒடிசா கடலோர பகுதியை நாளை காலை நெருங்கக் கூடும். அதனைத் தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும். இதன் காரணமாக இன்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதி , வடக்கு ,ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதி,  நாளை மத்திய மேற்கு வங்க கடல் பகுதி,  ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதி வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் , புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!