Tamilnadu Rain : 7 மாவட்டங்களில் இன்று கனமழை… 13 மாவட்டங்களில் நாளை கனமழை… எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

By Narendran SFirst Published Dec 4, 2021, 2:06 PM IST
Highlights

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூரில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது. டிசம்பர் 6, 7 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டிசம்பர் 8 ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் புயல் மாலை 6 மணிக்குள் வலுவிழந்து  தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் ஜாவத் புயலால் வங்கக்கடலில் மத்திய மேற்கு, வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் புயல் காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்து. வங்கக்கடலில் மத்திய மேற்கு, ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் புயல் வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக எடப்பாடி, மோகனூரில் தலா 9 செ.மீ மழையும் வெம்பக்கோட்டை, மேட்டூரில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.   

click me!