
திருவாரூர்
ஜி.எஸ்.டி. விஷயத்தில் மத்திய அரசு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், வடுவூர் மற்றும் எடமேலையூர் பகுதிகளில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசினார் தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், சிதம்பரம், நடராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சிங்குபாண்டியன், தொழிற்சங்க மாநில தலைவர் இளவரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன், “ஜி.எஸ்.டி. மசோதாவில் மத்திய அரசு அவசரம் காட்டுகிறது. இதனை பாராளுமன்றத்தில் வைத்து பரிசீலனை செய்வதுடன் மாநில அரசு வணிகர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
வடுவூர் ஏரியினை ரூ.5 கோடி மதிப்பீட்டில் உடனே தூர்வார வேண்டும்.
முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என முடிவெடுக்க முடியும். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகளால் தொழிற்சாலைகள், அண்டை மாநிலங்களுக்கு செல்வது போல, எய்ம்ஸ் மருத்துவமனையும் வேறு மாநிலத்திற்கு செல்ல வழி வகுத்து விடக்கூடாது.
உள்ளாட்சித் தேர்தல் இப்போது வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென தனி அலுவலர்களின் பதவி காலத்தை ஆறு மாத காலம் நீட்டித்திருப்பது எந்த விதத்திலும் சரியல்ல.
த.மா.கா.வை பொறுத்த வரை நாங்கள் யாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் தவறைச் சுட்டிக் காட்ட தயங்கமாட்டோம்” என்று அவர் கூறினார்.