
திருநெல்வேலி
திருநெல்வேலி நகரில் குடியிருப்புப் பகுதியில் மக்களுக்கு இடையூறாக இருந்த சாராயக் கடையை எதிர்த்து நீண்டநாள் போராடியதற்கு தற்போது வெற்றிக் கிடைத்தது. சாராயக்கடையை நிரந்தரமாக மூடியதையொட்டி மக்கள் மகிழ்ந்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
திருநெல்வேலி நகரில் காந்திமதி அம்பாள் சன்னதி எதிரே ஏ.பி.மாடத்தெருவில் டாஸ்மாக் சாராயக் கடை மற்றும் அதனையொட்டி பார் ஒன்றும் பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்தன.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இருந்த சாராயக் கடைகள் மூடப்பட்டதால், ஏ.பி.மாடத்தெருவில் உள்ள சாராயக் கடைக்கு நாள்தோறும் ஏராளமான குடிகாரர்கள் படையெடுத்தனர். இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு பல்வேறு இடையூறுகளும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டன.
இதையடுத்து அந்தப் பகுதி மக்கள், டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். பல்வேறுப் போராட்டங்களையும் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இந்த சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி திருநெல்வேலி காவல் உதவி ஆணையர் மாரிமுத்து தலைமையில் ஆய்வாளர்கள் சோமசுந்தரம், சுரேஷ்குமார் மற்றும் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
அப்போது ஒருசிலர் போராட்டம் நடத்துவதற்காக அந்தப் பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் காவலாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், டாஸ்மாக் சாராயக் கடை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், “அங்குள்ள சாராயக் கடையை மூடுவதற்கு ஆட்சியர் மூன்று நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். அதன் நகல் தற்போதுதான் கிடைத்தது. எனவே இன்று (நேற்று) முதல் கடை மூடப்டுகிறது” என்று தெரிவித்தனர்.
இதனால் போராட்டக்குழுவினர் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து, நன்றியைத் தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து போராட்டமும் கைவிடப்பட்டது.