வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்; காத்திருந்ததற்கு கிடைத்தது பலன்…

First Published Jun 29, 2017, 7:51 AM IST
Highlights
Tourists who enjoyed bathing in the city were flooded because of floods


திருநெல்வேலி

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இருந்ததால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு, மூன்று நாள்களாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்,

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தில் கடந்த ஐந்து நாள்களாக சூழல் மிகவும் அருமையாக இருக்கிறது. வெயில் இல்லாத ரம்மியமான சூழல், மனதை வருடும் குளிர்ந்த காற்று, சாரல் மழை ஆகியன சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

குற்றால சூழலை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால், அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளதால் வணிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால், குற்றாலத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களாக குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம், புலியருவிக்கு சென்றால் அங்கும் இரவில் தண்ணீர் அதிகமாக கொட்டியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக் கரையை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்குக் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வரிசையில் நின்று அருவியில் குளித்துச் சென்றனர்.

பிரதான அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மதியத்திற்கு மேல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காவலாளர்கள் அனுமதித்தனர். இதேபோல் பழைய குற்றாலம், புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

click me!