
திருச்சி
மக்கள் தொகை மற்றும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி வாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“மக்கள் சேவையை கருத்தில் கொண்டு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதை போல் மக்கள் தொகை மற்றும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி வாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்,
செயல் அலுவலர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல்கள் அரசு விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் வெளியிடப்பட்டு ஊதிய உயர்வுகளுடன் மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல் வெளியிட வேண்டும்.
மேலும் ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் தோற்றுவித்து அதில் தற்போது பணிபுரிந்து வரும் கணினி இயக்குபவர்களை முன்னுரிமை அடிப்படையில் விதி தளர்வு செய்து நியமனம் செய்ய வேண்டும்,
வெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேசினார்.
பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர் முதல் செயல் அலுவலர் வரை திருச்சி மாவட்டம் முழுவதும் 16 பேரூராட்சிகளிலும் பணியாற்றுபவர்கள் நேற்று விடுப்பு எடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.