மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவங்களுக்கு தட்டுப்பாடு; காத்திருந்து கடுப்பான பெற்றோர் போராட்டம்…

Asianet News Tamil  
Published : Jun 29, 2017, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவங்களுக்கு தட்டுப்பாடு; காத்திருந்து கடுப்பான பெற்றோர் போராட்டம்…

சுருக்கம்

Shortage of application forms for medical study parents held in protest

திருச்சி

திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாதல், நீண்ட நேரம் படிவத்திற்காக காத்திருந்து, படிவம் கிடைக்காததால் கடுப்பான பெற்றொர்கள் கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்ப படிவங்களின் விநியோகம் 27-ஆம் தேதி தொடங்கியது.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியிலும் நேற்று முன்தினம் விண்ணப்பப் படிவங்களின் விநியோகம் தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர தனியாகவும், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர தனியாகவும் வரைவோலை அளித்து விண்ணப்பப் படிவங்களை வாங்கினர்.

முதல் நாளான நேற்று முன்தினம் 250 விண்ணப்ப படிவங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்திருந்ததால் 250 பேர் தவிர மற்றவர்களுக்கு ‘டோக்கன்’ விநியோகம் செய்யப்பட்டு அவர்கள் 28-ஆம் தேதி (நேற்று) வந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று விண்ணப்பப் படிவங்கள் வாங்குவதற்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து வரிசையில் நின்றனர். ஆனால், அவர்களுக்கு விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்படவில்லை.

நேற்று முன்தினம் வழங்கப்பட்ட டோக்கன் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது. இதனால் நேற்று விண்ணப்பப் படிவம் வாங்குவதற்காக வந்து பல மணி நேரம் காத்து நின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோபமடைந்தனர்.

அவர்கள் மருத்துவக் கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கிறோம். எங்களுக்கும் விண்ணப்பப் படிவங்கள் கொடுங்கள் என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அதற்கு மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் 250 விண்ணப்பப் படிவங்கள்தான் வந்துள்ளன. அதனால் விண்ணப்பம் வழங்க முடியாது என பதிலளித்தனர்.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்களுக்கு டோக்கனாவது கொடுங்கள் நாளைக்கு வந்து படிவங்களை வாங்கி கொள்கிறோம் என கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நேரத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆய்வாளர் இப்ராகீம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்தார்.

மேலும், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பிலும் நாளை (இன்று) 1000 விண்ணப்ப படிவங்கள் வர இருக்கிறது. நாளைய தினம் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினர்.

இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய அனைவரும் கலைந்துச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இணையும் முடிவில் பல்டி அடித்த குன்னம் ராமச்சந்திரன்... அரசியலை விட்டே விலகுவதாக அறிவிப்பு
2 -ஆக உடையும் கதர் கட்சி..! திமுகவுக்கு எதிராக திரளும் ‘உண்மையான’ காங்கிரஸ்..?