
காவிரி நீரை பெற்று தராமலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசு தான் விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பு. எனவே, மத்திய அரசை கண்டித்து டிசம்பர் 5-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
திருவாரூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஸ்ரீதர், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், சங்க நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ், தஞ்சை மாவட்ட தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் நெல்ஜெயராமன், வரத ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
“வரலாறு காணாத வறட்சியால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டதால் இதுவரை 13 விவசாயிகள் இறந்துள்ளனர். தற்கொலையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. காவிரி நீரை பெற்று தராமலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசு தான் விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண பணிகளை போர்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், தற்கொலை, அதிர்ச்சி மரணம் அடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், வேலை வாய்ப்பினை இழந்த விவசாயிகள் குடும்ப அட்டைக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கிட வேண்டும். விவசாயிகள் நிலுவையில் உள்ள கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
2015-16 ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல், மேகதாது அணை கட்ட டிசம்பர் 2-வது வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும் என அறிவித்த கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம். எனவே மத்திய அரசு புதிய அணை கட்டும் பணியினை தடுத்து நிறுத்திட வேண்டும்” என்று தலைவர் பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறினார்.