இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க கோரி

First Published Nov 26, 2016, 11:28 AM IST
Highlights


திருவாரூர்,

பயிர் கருகியதால் இறந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியாக வழங்க வேண்டும் திருவாரூரில் மு.க.ஸ்டாலினிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் இதுவரையில் 14 விவசாயிகள் இறந்துள்ளனர். இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு வந்தார்.

அவரிடம், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவினை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு சார்பில் ராசிமணல், மேகதாது அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பயிர்கள் கருகியதால் தற்கொலை, அதிர்ச்சியில் இறந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளருக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு (2015–16) பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தர காப்பீடு நிறுவனம் தயாராக இருந்தும், அறுவடை ஆய்வு அறிக்கையை புள்ளியியல் துறை வழங்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் உள்ளனர். அதனை உடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கூறியதுபோல் கல்விக்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளை பின்பற்றி தமிழக அரசும் தனது நிதியில் இருந்து வங்கிகளுக்கு ஈடுசெய்து விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்புக்கான நிலுவைத்தொகை முழுமையும் உடன் வழங்கிட வேண்டும்” என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

 

click me!