பழைய செல்போன்களை உடைத்து வீசுவதே சிறந்த வழி

Asianet News Tamil  
Published : Nov 26, 2016, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
பழைய செல்போன்களை உடைத்து வீசுவதே சிறந்த வழி

சுருக்கம்

பெண்களது செல்போனில் இருக்கும் பழைய தகவல்களை எடுத்து சமூக வலைதளங்களில் தவறான வழிகளில் பயன்படுத்திவிட முடியும். ஆகவே, பழுதடைந்த பழைய செல்போன்களை உடைத்து வீசுவதே சிறந்த வழி என்று தென்மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி.) எஸ்.முருகன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில், சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், தென்மணடல காவல்துறை தலைவர் ஐ,ஜி எஸ்.முருகன் பேசியதாவது:

“அறிவியல் வளர்ச்சியால் இப்போது இணையதளம், செல்லிடப்பேசிகளில் சமூக வலைதளப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. ஆண், பெண் இருபாலரும் இவற்றை பயன்படுத்தும்போது தங்களையே அறியாமல் குற்றம் செய்கிறார்கள். காப்புரிமை பெற்ற பாடல்களைப் பதிவிறக்கம் செய்வது முதல் குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுப்பது வரை அனைத்தும் குற்றமே. ஆனால், இவற்றை நாம் தெரியாமலேயே செய்து வருகிறோம்.

சமூக வலைதளங்களால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதனை மட்டுமே இளைய சமுதாயத்தினர் எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான தகவல்களைப் பரப்புவது, சமூகத்தில் பிரச்னையை உருவாக்கும் தகவலுக்கு ஆதரவு அளிப்பது போன்றவை குற்றங்களாகும்.

சமூக வலைதளம் குறித்த அறிவும், பயன்பாடும் தேவை. அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் சமூக வலைதளங்களை மிகவும் எச்சரிக்கையோடு கையாள வேண்டும். குறிப்பாக, பெண்கள் மிகவும் கவனத்தோடு பயன்படுத்த வேண்டும்.

தங்களது மின்னஞ்சல் முகவரிக்கான பாஸ்வேர்டுகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டும். முகநூல், கட்செவிஅஞ்சல் உள்ளிட்டவற்றில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிநவீன செல்லிடப்பேசிகளாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். இல்லையெனில் கதிர்வீச்சு அதிகரித்து உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.

செல்லிடப்பேசிகளை கடைகளில் கொடுத்து மாற்றக் கூடாது. ஏனெனில் மின்னணு சாதனங்களில் எந்த ஒரு படம், விடியோவையும் முற்றிலும் அழிக்க முடியாது. அவை செல்லிடப்பேசி அல்லது மெமரி கார்டுகளிலேயே இருக்கும். திரும்பப் பெறும் மென்பொருள்களால் உங்களது பழைய தகவல்களை எடுத்து தவறான வழிகளில் பயன்படுத்திவிட முடியும். ஆகவே, பழைய செல்லிடப்பேசிகளை உடைத்து வீசுவதே சிறந்த வழி.

சைபர் குற்றங்கள் நிகழ்ந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் வகையிலும், குற்றங்களைத் தடுத்து தண்டனை வாங்கிக் கொடுக்கவும் இந்தியாவில் சட்டப்பிரிவுகள் உள்ளன. அதன் மூலம் 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

இக் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பிரிட்டோ, பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியுறாங்க.. பொதுமக்கள் எப்படி பாதுகாப்பா வாழ முடியும்..? டிடிவி கேள்வி
இன்று முதல் 31 தேதி வரை! 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்! வானிலை மையம் கொடுத்த வார்னிங்