நீட் தேர்வில் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்
நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்ற வரும் நிலையில், நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு சார்பாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை, 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் இந்த பிரச்சனை சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. கேளராவில் மாணவி அணிந்திருந்த உள்ளாடையை கழட்டுமாறு கூறியது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. . இந்தநிலையில், டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், நீட் தேர்வுக்கு முந்தையநாள் டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.
பணம் பெற்று தேர்வு எழுதியவர்கள் கைது
ஆள் மாறாட்டம் செய்வதற்காக அடையாள அட்டைகளில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தேர்வர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளது.விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக விண்ணப்பதாரர்களின் புகைப்படங்களை கிராஃபிக்ஸ் செய்து பயன்படுத்தியதாக சிபிஐ அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.. இந்த ஆள்மாறாட்டத்தில் முக்கிய நபரான சுஷில் ரஞ்சனை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் இவருக்கு உடந்தையாக இருந்த பிரிஜ் மோகன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா, நிதி, கிருஷ்ண சங்கர் யோகி, , ரகுநந்தன், ஜீபு லால், பாரத் சிங் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
உள்ளாடையை கழற்றியே ஆகணும்.. நீட் தேர்வில் சர்ச்சை - மாணவி பரபரப்பு புகார் !