
திருப்பூர் மாவட்டம் சாமளாவுரத்தில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன், அங்கிருநத பெண்ணின் கன்னத்தில் பளார் என அறைந்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரையும் போலீசார் சரமாரியாக அடித்து விரட்டினர்.
பெண்ணை கன்னத்தில் பலமாக அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுதொடர்பாக, அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டிஎஸ்பி பாண்டியராஜனால், தாக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, அந்த பெண் கேட்கும் திறனை இழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட 27 பேரையும் விடுவிக்க வேண்டும். பொதுமக்களை தாக்கிய போலீசார், பெண்ணை தாக்கி செவி திறன் இழக்க செய்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையயொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெண்ணை கடுமையாக தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று, விசாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட், இன்று பகல் 2.30 மணிக்கு இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளது.