
பெருங்களத்தூர், ஆர்எம்கே நகர் சோழன் தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (60). தினமும் இவர் வசிக்கும் தெருவில் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை சுப்புலட்சுமி நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ஒரு பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். அதில் இருந்து இறங்கிய ஒருவர், சுப்புலட்சுமியின் அருகில் சென்றார்.
திடீரென அந்த வாலிபர், சுப்புலட்சுமியின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்ட அவர், நகை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். உடனே, அந்த வாலிபர்கள் பைக்கில் இருந்த மற்றொரு வாலிபரை அழைத்தார்.
இருவரும் சேர்ந்து, சுப்புலட்சுமியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும் அந்த வாலிபர்கள், சுப்புலட்சுமியிடம் இருந்த 10 சவரன் நகையை பறித்து கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் அசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.