பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம்: மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Nov 7, 2023, 3:06 PM IST

தேசிய மலரான தாமரையை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது


தேசிய கட்சியான பாஜக தற்போது மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ளது. இக்கட்சிக்கு தேர்தல் ஆனையம் தாமரை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர், தேசிய மலரான தாமரையை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எனது மனு மீது இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையத்தின் இந்தச் செயல், இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இந்த மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

பழைய அரசு வாகனங்களின் பதிவு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு!

இதனை அவசர வழக்காகவும் விசாரிக்க அவர் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா? தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து டிசம்பர் மாதம் 8ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்  விதிமீறலை  நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!