வன்னியர் சங்க கட்டிடத்தை மீட்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு, செயல்பட்டுவந்தது. சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து, வன்னியர் சங்கக் கட்டிடத்தை மீட்கும் பொருட்டு அதற்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அங்குள்ள கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்ததுடன், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், வன்னியர் சங்க கட்டிடத்தை மீட்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.
அதிமுகவில் இணைகிறேனா? காயத்ரி ரகுராம் விளக்கம்!
சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கண்டோன்மெண்ட், தமிழக அரசு, காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகம் ஆகியவி உரிமை கோருவதால், நிலத்தை மீட்பது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே நிலம் கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமானது என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், உரிய சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.