
ஈரோடு
ஈரோட்டில் காரும் லாரியும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டதில் நண்பர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழரசு (32), கனிகவேல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36), திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், அருண் ஆகிய ஐவரும் நண்பர்கள்.
இவர்கள் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல, ஈரோட்டில் இருந்து கரூருக்கு கோழித் தீவனம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது.
மொடக்குறிச்சி, சோலார், கொள்ளுக்காட்டுமேடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் வந்தபோது லாரியும், காரும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் தமிழரசு, கனிகவேல், மணிகண்டன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், பார்த்திபன், அருண் இருவரும் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, மொடக்குறிச்சி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.