
திண்டுக்கல்
20 நாள்களாக குடிநீர் விநியோகிக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் குடிநீர் கேட்டு திண்டுக்கல்லில் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட பாரதிபுரம் பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும், குடிநீர் வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனையடுத்து அப்பகுதி பெண்கள், வெற்றுக் குடங்களுடன் சந்தை சாலை பிரதான சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய காவலாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, "ஓரிரு நாள்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்ததையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.