அடுத்தடுத்த வீடுகளில் 22 சவரன் நகை கொள்ளை; பக்கா பிளான் போட்டும் மண்டைமேல இருந்த கொண்டையை மறந்துட்டாங்க...

First Published May 31, 2018, 9:19 AM IST
Highlights
thieves theft 22 pounds jewelry in nearby homes


ஈரோடு
 
ஈரோட்டில் உரிமையாளர் வீட்டில் இல்லாததை அறிந்து திட்டம் தீட்டி அடுத்தடுத்த வீடுகளில் 22½ சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

ஈரோடு மாவட்டம், தண்ணீர்பந்தல்பாளையம் கணபதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிலிப்மேத்யூவ் (61). இவர் ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பேபிகுட்டி. 

பிலிப்மேத்யூவின் அம்மா இறந்துவிட்டதால் அவரும், பேபிகுட்டியும் கடந்த 26-ஆம் தேதி கேரளா மாநிலத்திற்கு சென்றனர். இந்த நிலையில் கணபதிநகரை சேர்ந்த ஒருவர் பிலிப்மேத்யூவின் வீடு வழியாக நடந்து சென்றார். 

அப்போது பிலிப்மேத்யூவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பிலிப்மேத்யூவுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் அவர் ஈரோட்டிற்கு நேற்று காலை வந்து பார்வையிட்டார். 

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது.

இதேபோல பிலிப்மேத்யூவின் பக்கத்து வீட்டை சேர்ந்த பழனிசாமி என்பவரின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மாவதி. 

இவர்களும் திருப்பூரில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிற்கு கடந்த 26-ஆம் தேதி சென்றனர். அவருடைய வீட்டுக்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து 5½ சவரன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், பிலிப்மேத்யூவ் மற்றும் பழனிசாமி வீடுகளில் ஆட்கள் இல்லாததை தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அப்போது பிலிப்மேத்யூவ் வீட்டில் தடயங்களை மறைக்கும் விதமாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சுவற்றில் பதிவாகி இருந்த கைரேகைகளை கொள்ளையர்கள் அழித்துவிட்டு சென்றதும் தெரியவந்தது. 

இதனால் கைரேகை நிபுணர்கள் அந்த பாத்திரத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், பழனிசாமியின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன.

கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்காக அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை காவலாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நூல் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை காவலாளர்கள் பார்வையிட்டனர். 

அதில், கடந்த 27-ஆம் தேதி இரவு 11.10 மணியளவில் மர்ம நபர்கள் மூவர் காரில் வந்து இறங்கியதும், அதில் இருவர் முகமூடி அணிந்து இருந்ததும் தெரியவந்தது. 

முகமூடி அணிந்தவர்கள் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதிப்பதும், அவர்கள் கதவை உடைத்து உள்ளே செல்லும் வரை யாராவது வருகிறார்களா? என்று சாலையில் இருந்து ஒருவர் கண்காணிப்பதும் கேமராவில் பதிவாகி இருந்தது.

முதலில் பிலிப்மேத்யூவ் வீட்டிலும், பின்னர் பழனிசாமியின் வீட்டிலும் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

click me!