
ஜிஎஸ்டி-யை எதிர்த்து தமிழ்நாட்டில் உணவகங்கள் மூடப்பட்டதால், ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்படைந்தது என்று தமிழ்நாடு உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.வெங்கட சுப்பு கூறினார்.
இந்தியாவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட உள்ளது.
இதில், ரூ.50 இலட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள உணவகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 0.5 சதவீதம் சேவை வரி 5 சதவீதமாகவும், ரூ.50 இலட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டும் உணவகங்களுக்கு 2 சதவீதம் விதிக்கப்பட்ட வரி 12 சதவீதமாகவும், ஏ.சி. வசதி உடைய ரெஸ்டாரண்டு உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீதம் வரி 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதற்கு தென் மாநில உணவகங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் நேற்று உணவகங்களுக்கு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்களுக்கு நேற்று மூடப்பட்டிருந்தன.
உணவகங்கள் அடைப்பு போராட்டத்தினால் வசதி படைத்தவர்கள் கூட சாலையோர கடைகளில் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. அம்மா உணவகங்களிலும் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. மக்கள் கூட்டம் காரணமாக சாலையோர கடைகள் மற்றும் அம்மா உணவகங்களில் சாப்பாடு விரைவில் விற்று தீர்ந்தது. பலர் சாப்பாடு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலூரில் அண்ணா சாலை, காட்பாடி சாலை, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், ஆற்காடு சாலை உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதியில் செயல்பட்ட உணவகங்களும் மூடப்பட்டன. சிறிய உணவகங்கள் கூட திறக்கப்படவில்லை.
வேலூரை பொறுத்தவரை திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்பவர்கள் இங்கு இறங்கி செல்கின்றனர். அதேபோல் இங்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் இன்றி வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து தங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு உணவகங்களையே நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த உணவகங்கள் அடைப்பு போராட்டத்தினால் அவர்கள் சாப்பிட முடியாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டனர். வேறுவழியின்றி பலர் சாலையோர உணவு கடைகளில் சாப்பிட்டனர்.
முழு அடைப்பு குறித்து தமிழ்நாடு உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.வெங்கட சுப்பு கூறியது:
“தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களில் சுமார் 5 இலட்சம் ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்படைந்து உள்ளது. தமிழகத்தில் சுமார் 2 இலட்சம் உணவகங்கள் அடைக்கப்பட்டதால் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
வருகிற 3-ஆம் தேதி ஜி.எஸ்.டி. குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த வரி விகிதங்கள் எங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்படும் என நம்புகிறோம்.
இல்லையென்றால் 6-ஆம் தேதி போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்” என்று அவர் கூறினார்.