பேருந்து கட்டண உயர்விலும் குளறுபடி; ஒரு கட்டணத்திற்கு 3 டிக்கெட் - பிளான் பண்ணாமல் பண்ணா இப்படிதான்...

First Published Jan 23, 2018, 7:39 AM IST
Highlights
Bus tariff hike 3 ticket for a fee - without plan this will happen


பெரம்பலூர்

தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தில் கூட குளறுபடி நிலவுகிறது. விரைவு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, ஒரு கட்டணத்திற்கு மூன்று டிக்கெட் வழங்குவது போன்ற அவலங்களும் ஏற்படுவதால் பெரம்பலூரில் கிராம மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கட்டண உயர்வு

தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வால்  மக்களும், மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அதிலும், உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஏற்படும் குளறுபடியால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

கூடுதல் கட்டணம்

விரைவு பேருந்துகளைவிட, நகர்ப்புற பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, கட்டண உயர்வுக்கு பிறகு பெரம்பலூரில் இருந்து எசனைக்கு சாதாரணப் பேருந்துகளில் ரூ. 6, விரைவு பேருந்துகளில் ரூ.10 வசூலிக்கப்படும் நிலையில், நகர்ப்புற பேருந்துகளில் மட்டும் ரூ. 11 வசூலிக்கப்படுகிறது.

குளறுபடி

இதேபோல, பெரம்பலூரில் இருந்து சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் விரைவு பேருந்துகளை விட, நகர்ப்புற பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக நடத்துநர்களுக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.  

அனுமதி  மறுப்பு

இந்தக் கட்டண குளறுபடி குறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை மேலாளரிடம் நடத்துநர்கள் புகார் தெரிவித்தும், வழக்கம்போல எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிளை மேலாளரிடம் புகார் அளிக்கச் செல்லும் பயணிகளுக்கு பணிமனையில் அனுமதி மறுக்கப்படுகிறது. தொலைபேசி அழைப்பையும் அவர் ஏற்பதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு கட்டணம் மூன்று  டிக்கெட்

பெரம்பலூர்  - எசனைக்கு ஒரு நிறுத்தமாக இருந்த நிலையில், தற்போது மூன்று நிறுத்தம் அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல, கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நகர்ப்புற பேருந்து நடத்துநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  

போதிய டிக்கெட் வழங்கும் கருவி இல்லாததால் நடத்துநர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். கட்டண உயர்வுக்கு ஏற்றவாறு டிக்கெட்கள் வழங்காததால், ஒரே கட்டணத்திற்கு மூன்று டிக்கெட்களை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

திருச்சி - பெரம்பலூர் வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்கு ரூ. 48-க்கு, 3 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதேபோல, பெரம்பலூர் - சென்னை விரைவு பேருந்துகளில் 5 டிக்கெட்கள் வரை வழங்கப்படுகிறது.  

ஓட்டுநர்கள் வருத்தம்

"கருவிகள் இல்லாததால் கட்டணத்துக்கேற்ப டிக்கெட் தருகிறோம். கட்டண உயர்வால் மக்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலையில், உரிய டிக்கெட் இல்லாததால் பெரிதும் அவதிப்படுகிறோம்" என்று அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

click me!