
வரதராஜன்பேட்டை,
ஆண்டிமடம் அருகே தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டும், அரசு பேருந்தைச் சிறைப்பிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ளது அழகாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று இருக்கிறது. இதன்மூலம் அழகாபுரம் வடக்கு தெரு, நாயுடு தெரு, திராவிடநல்லூர் செல்லும் தெரு ஆகிய தெருக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் நீர் இல்லாமல் பழுதடைந்ததால் கடந்த 6 மாதங்களாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற இயலவில்லை.
இதனால் மற்றொரு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தனர். தற்போது அந்த தொட்டியிலுள்ள மோட்டாரும் பழுதடைந்ததால் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இதனால் கோவமடைந்த பொதுமக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க கோரி நேற்று காலி குடங்களுடன் அழகாபுரம் சிலம்பூர் - ஆண்டிமடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் காவல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலாளார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகர், செந்தில்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை ஆய்வு செய்தனர்.
பின்னர், அவர்கள் கூறுகையில், “இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, இன்னொரு நீர்த்தேக்க தொட்டியின் பழுதடைந்த மோட்டாரை சரிசெய்து உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.