புயல் சூறைக்காற்றில் பாதிப்பு - 5 நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

First Published Dec 15, 2016, 10:20 AM IST
Highlights


5 நாட்கள் விடுமுறைக்குப் பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முன்னதாக இன்று பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வர்தா புயல் காரணமாக கடந்த 12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் சென்னையை கடந்த பிறகு, சென்னையின் சாலைகள் மற்றும் தெருக்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் சென்னையில் 300க்கும் மேற்பட்ட பள்ளி வளாகங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி வளாகத்தில் குளம்போல் தண்ணீரும் தேங்கியது. விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவது, அறுந்து விழுந்த கம்பிகளை சீர்செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்க காலதாமதம் ஆனது.

இதற்கிடையில் 13ம் தேதி மிலாது நபி அரசு விடுமுறை என்பதால் அன்றும் பள்ளிகள் இயங்கவில்லை. பின்னர் சீரமைப்பு பணிகள் முடியாததால் நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பள்ளிகள் இயங்குமா என்ற சந்தேகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் இருந்தனர். இதுகுறித்து நேற்று மாலை பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், “பள்ளி வளாகங்களை சரிசெய்யும் பணி ஓரளவுக்கு முடிந்துள்ளதால் இன்று பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து 5 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

click me!