மழைநீரில் மூழ்கிய வீடுகள் - உணவு, தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி

Asianet News Tamil  
Published : Dec 15, 2016, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
மழைநீரில் மூழ்கிய வீடுகள் - உணவு, தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி

சுருக்கம்

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சி, மகாலட்சுமி நகரில், பல்வேறு ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், நீஞ்சள்மடு பகுதிக்கு வந்ததால், மகலாட்சுமி நகர் மற்றும் திம்மாவரம் பகுதியில் சுமார் 20அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியது.

இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அங்கு வசித்த மக்கள், சில கட்டிடங்களில் முதல் மற்றும் 2வது தளத்துக்கு சென்று, தவித்தனர். ஆனால், அவர்களை மீட்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதையொட்டி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தண்ணீரில் மூழ்கி நாசமானது. லட்சக்கணக்கான பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. பொதுமக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதிகாரிகளை கண்டித்து செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் பைபாஸ் அருகில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். நீஞ்சள்மடு அணையில் இருந்து ஷெட்டர்கள் உடனடியாக திறக்கப்பட்டு, பாலாற்றில் விடப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அணையின் அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டு, பாலாற்றுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நீஞ்சள்மடு அணை கட்டியதில் இருந்து, வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் ரூ.20 லட்சம் செலவில், மகாலட்சுமி நகரில் சுமார் 10 அடிக்கு மேல், வெள்ளம் புகாமல் இருக்க மண் கொட்டி நிரப்பினர். ஆனால், தண்ணீரில் அவை அடித்து செல்லப்பட்டது. இதனால், அந்த பணம் வீணாகிப் போனது. இதனை கருங்கற்களால் கட்டினால், எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாங்கும்.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு, அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதால், தற்போது தண்ணீரில் இந்த பகுதி மூழ்கிவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நாங்கள், எங்களது உடமைகளை இழந்து இதுவரை மீளாமல் இருக்கிறோம்.

தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால், மீண்டும் பாதிப்படைந்துள்ளோம். இதற்கு முழு விசாரணை மேற்கொண்டு, இந்த பகுதியில் நிரந்தர தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும். அரசு பணத்தை வீணடித்த பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது, பேரிடர் மீட்பு குழு அதிகாரியும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!