தூத்துக்குடியில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க இரண்டரை மணி நேரம் போராடினர் தீயணைப்புத் துறையினர். ஆனால், அதற்குள் பல இலட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் கருகி நாசமாயின.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க இரண்டரை மணி நேரம் போராடினர் தீயணைப்புத் துறையினர். ஆனால், அதற்குள் பல இலட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் கருகி நாசமாயின.
தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலை பேருந்து நிலையத்திற்கு பக்கத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதனை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். தொழிற்சாலை வளாகத்தில்தான் இவரது வீடும் உள்ளது.
நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல தொழிலாளர்கள் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் கிடங்கில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது.
கிடங்கில் மருந்துடன் கூடிய தீக்குச்சிகள் மூட்டை மூட்டையாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தீ பிடித்ததால் கிடங்கு முழுவதும் அந்த தீ மளமளவென பரவிற்று. இதனால், தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
வெளியே வந்த தொழிலாளர்கள் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்ராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி ஒருவழியாக தீ அணைக்கப்பட்டது.
இந்தத் தீ விபத்தில் மூட்டை மூட்டையாக இருந்த மருந்து முக்கிய தீக்குச்சிகள் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு பல இலட்சங்கள் இருக்குமாம். தீயணைப்பு வீரர்களின் துரித செயலால் தீ அணைக்கப்பட்டு தீப்பெட்டி தொழிற்சாலை முழுவதும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிந்த கழுகுமலை காவலாளர்களின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.