Armstrong Murder : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இன்று மாலை சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்று வழக்கம்போல தனது சகாக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரபல வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங். அப்பொழுது இரண்டு, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்தார், உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
undefined
அங்கு அவருடைய ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அதே நேரம், திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிராக முழக்கங்களின் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலை சம்பந்தமாக 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் "இன்று ஜூலை 5ஆம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோவில் தெருவில் உள்ள தன் வீட்டின் முன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் நின்று கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு ரத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்த நபர்களுடன் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுமதித்த பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதில் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய திரு ஆஸ்ரா கர்க், கூடுதல் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.