
வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, விவசாய உதவிகளைப் பெறுவதற்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வி.ஏ.ஓ, ஆர்.ஐ, தாசில்தார் என ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்று சான்றிதழ்களைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
வி.ஏ.ஒ, ஆர்.ஐ, தாசில்தார் ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட நபர், நேரில் சென்று சான்றிதழ் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவர்களிடத்தில் அலைய விருப்பமில்லாதவர்களுக்காகவே இருப்பவர்கள் இடைத்தரகர்கள். இடைத்தரகர்களிடம் காசு கொடுத்துவிட்டால் போதும். அவர்களே அனைவரிடமும் கையெழுத்து பெற்று சான்றிதழைப் பெற்றுக்கொடுத்து விடுவர்.
அரசு அலுவலகங்களில் இதுபோன்ற இடைத்தரகர்களின் தலையீட்டை தடுப்பதற்காகவும் மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்பதற்காகவும் அரசால் உருவாக்கப்பட்டதுதான் அரசு இ-சேவை மையங்கள். அரசு இ-சேவை மையங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நகராட்சி அலுவலகத்திலும் தாலுகா அலுவலகத்திலும் உள்ளன.
மக்கள் நேரடியாக சென்று விண்ணப்பித்தால் ஓரிரு நாட்களில் சான்றிதழ்கள் கிடைத்துவிட வேண்டும். இடைத்தரகர்களையும் கால தாமதத்தையும் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இ-சேவை மையங்களிலும் பழைய நிலையே தொடர்கிறது.
மக்கள் நேரடியாக சென்று விண்ணப்பித்தால், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் இடைத்தரகர்கள் மூலம் அணுகினாலே சான்றிதழ்கள் கிடைப்பதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான இ-சேவை மையங்கள் இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மக்களிடம் மனுக்களை வாங்கி இ-சேவை மையங்களில் கொடுத்து இடைத்தரகர்கள் பணம் பார்க்கிறார்கள். இதற்கு இ-சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் ஒத்துழைக்கிறார்கள்.
இ-சேவை மையத்தில் நேரடியாக விண்ணப்பிப்பவர்கள், சர்வர் பிரச்னை, இண்டர்நெட் பிரச்னை என கூறி அலையவிடப்படுகின்றனர். மேலும் எந்த இ-சேவை மையத்திலும் எந்த தாலுகாவுக்கும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இருந்தும், குறிப்பிட்ட தாலுகாவுக்குதான் விண்ணப்பம் வாங்க வேண்டும் என்று மக்கள் வற்புறுத்தப்படுகின்றனர்.
சமீபத்தில், மேலூரில் முறைகேடாக நடந்துகொண்ட ஒரு மையத்தின் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். அதேபோல அனைத்து மையங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.