கொடநாடு எஸ்டேட்டை மீட்பேன்: தொடை தட்டும் பிரிட்டீஷ் துரையின் மகன்...

First Published May 31, 2017, 5:23 PM IST
Highlights
Britis Durai s son challenges I will Retrieving the Kodadan Estates


பேரன் பேத்தி எடுத்த கிழவிக்கு காது குத்தி பேரு வைக்க வந்தானாம் ஒருத்தன்...அப்படின்னு உங்க ஊரு, எங்க ஊரு பக்கமெல்லாம் சில பெருசுங்க கிண்டலடிக்கும். கன்னாபின்னாவென காலம் தாழ்த்தி முடிவெடுப்பவர்களை குத்திக்காட்டும் வாக்கியம்தான் இது. இப்படி நறுக் நக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் கோடநாடு எஸ்டேட்டை ஜெ மற்றும் சசி டீமுக்கு விற்றவரின் மகன். 

ஜெயலலிதாவுக்கு முன் கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளராக இருந்தவர் கிரேக் ஜோன்ஸ். இவரை துரை என்றுதான் அந்த காலத்தில் அழைப்பாளர்கள் எஸ்டேட் கூலியாட்கள். இப்போதும் கூட ஜெயலலிதாவின் எஸ்டேட்டுக்கு ‘துரை எஸ்டேட்’ என்றுதான் பெயருண்டு. ஜெ., இங்கிருந்த காலத்தில் இந்த பெயரை தன் பணியாளர்கள் புழங்குவதை அவர் கூட கண்டுகொள்ள மாட்டார். ஆனால் சசி காதில் விழுந்தால் நறநறவென பல்லை கடித்துவிடுவார். ஜெயலலிதா உயிடன் இல்லை, சசிகலா வெளியில் இல்லாத இந்த நிலையில் இந்த கதைகள் ஒரு புறம் கிடக்கும். 

கிரேக் ஜோன்ஸ் பிரிட்டனை சேர்ந்தவர். 1970க்கு பிறகு கர்நாடக மாநிலம் வந்து காஃபி எஸ்டேட் பிஸ்னஸில் இறங்கினார். காஃபி, டீ நன்றாக விளையும் மேலும் சில இந்திய பகுதிகளை தேடியபோது சில புரோக்கர்கள் மூலமாக நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதி அவரது கவனத்தில் பட்டது. 1975_ல் சுமார் முப்பத்தைந்து லட்சம் ரூபாய்க்கு இந்த எஸ்டேட்டை வாங்கியிருக்கிறார்.

பெங்களூருவில் தங்கினாலும் அவ்வப்போது இங்கு வருவதுமாக இருந்த துரை ஜோன்ஸுக்கு திடீரென பொருளாதார சிக்கல். அதனால் கோடநாடு எஸ்டேட்டில் 60 ஏக்கரை விற்றுவிட்டு 900 ஏக்கரை மட்டும் வைத்திருந்தார். இந்த எஸ்டேட்டை வைத்து இரண்டு வங்கிகளில் பல லட்சங்கள் கடனும் வாங்கியிருந்தார். 

ஒரு கட்டத்தில் கடனுக்கான வட்டி குட்டிகளை ஈன்று தள்ள துரைக்கு சிக்கல் இறுகியது. இதனால் கோடநாடு எஸ்டேட்டை விற்று கடனை அடைக்க முடிவெடுத்தார். இந்த நேரத்தில்தான் ஜெ., மற்றும் சசி அண்ட்கோ இந்த எஸ்டேட்டை வந்து பார்த்தனர். வாங்க முற்பட்டனர். பெங்களூரில்  வைத்து பல ரவுண்டுகள் பேசியும் பேரம் படியவில்லை. குறிப்பாக சசியின் அணுகுமுறை துரைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பிஸ்னஸ் தோற்றது. 

விற்க விரும்பவில்லை என்று துரை கூறிவிட்டு எழுந்துவிட்டார். சில நாட்களில் அவரது வீட்டை தேடி அடையாளம் மறைகப்பட்ட காரில் சிலர் வந்தனர். ‘ஜெயலலிதாவை தவிர வேற யாருக்கும் இதை நீ விற்க கூடாது.’ என்று மிரட்டினார்களாம். பெங்களூரு போலீஸில் துரையின் குடும்பம் புகார் செய்தது. பின் பெரிய மனிதர்களின் தலையீட்டால் சமாதானமாகி வாபஸ் பெறப்பட்டது புகார். 

இதன் பின் இரண்டு பெரிய நிறுவனங்கள் கோடநாடு எஸ்டேட்டை வாங்க விரும்பி அணுகினர். ஆனால் இடையில் புகுந்த ஒரு டீம் மிரட்டி அவர்களை தடுத்ததாம். யாருமே வாங்க வராத நிலையில், வங்கிக்கடன் வேறு கழுத்தை நெறிக்க ஜெ மற்றும் சசிக்கே அதை விற்க சம்மதித்தார் ஜோன்ஸ் துரை. சென்னையில் ராமசாமி உடையார் மூலம் பேச்சு நடத்தப்பட்டது. துரையின் மகனான பீட்டர் ஒன்பதரை கோடி கேட்டிருக்கிறார். ஆனால் பேரம் படிந்ததோ ஏழரை கோடியில். கூடவே வங்கிக்கடனை அடைப்பாதாகவும் சொல்லியிருக்கிறார்கள். எஸ்டேட் முதலில் உடையார் குடும்பத்தினருக்கு கைமாறியது. பின் ஜெ., சசி குடும்பத்துக்கு கைமாறியது. 

நியாயமான தொகையை விட இரண்டு கோடி குறைவாக நஷ்டத்துக்கு விலை போனதாலும், சொன்னபடி வங்கிக்கடனை சசி டீம் கட்டாததாலும் , வங்கிக்கடன் ஏறிக்கொண்டே போனதாலும் கிரேக் ஜோன்ஸ் நொந்து நொந்து 2008_ல் இறந்துவிட்டாராம். 

இதெல்லாமே ஜோன்ஸின் மகன் பீட்டரை பெருமளவில் காயப்படுத்தியிருக்கிறது. அநியாயமாய் பறிக்கப்பட்ட தங்களின் எஸ்டேட் விவகாரத்தை வெளியே கொண்டு வர பலவாறு முயன்றாராம். ஆனால் தமிழகத்தில் ஜெ., ஆட்சியே தொடர்ந்ததால் எதுவும் பண்ண முடியவில்லையாம். 

ஆனால் இப்போது ஜெ.,வும் மறைந்து, சசியும் சிறை சென்றுவிட்ட நிலையில் தங்கள் குடும்பத்தை மிரட்டி வாங்கப்பட்ட கோடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்கும் முயற்சியில் இறங்கப்போவதாக பீட்டர் அறிவித்திருக்கிறார். இது குறித்து பெங்களூருவை சேர்ந்த சட்ட வல்லுநர்களுடன் பேசி கூடிய விரைவில் முடிவெடுக்கப் போகிறேன் என்கிறார். 
இது தொடர்பாக கூடிய விரைவில் இவர் வழக்கு தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  இது ஆகாத வேலை என்கிறார்கள் தமிழக சட்ட வல்லுநர்கள் சிலர். இவரது வாதம் நீதிமன்றத்தில் நிற்பது கடினமே என்கிறார்கள்.  

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அரசுடமையாக்கப்பட வேண்டிய ஜெ.,வின்சொத்துக்களின் பட்டியலில் கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவும் வருகிறது. இவற்றை அரசுடமை ஆக்குவதற்கான பூர்வாங்க பணிகளை அரசுத்துறைகள் துவக்கிவிட்டன. இனி இந்த சொத்தை அரசு தனது பயன்பாட்டிற்கு வைக்கவோ அல்லது பொது ஏலத்தில் விடவோ செய்யலாம் என்கிறார்கள். 

அப்படியே பொது ஏலத்தில் வந்தாலும் கூட மிக மிக மிக உயர்வான மதிப்புக்கு இன்று மாறி நிற்கும் அந்த தொள்ளாயிரம் ஏக்கரை மீண்டு தங்கள் சொத்தாக எடுக்கும் அளவுக்கு பீட்டர் வசம் மீட்டர் இருக்குமா என்பது நீலகிரி மலை உயரத்திலான கேள்விக்குறி!

பீட்டரு நீ ரொம்ம்ம்ம்ப லேட்டு! என்றே சொல்லத் தோண்றுகிறது.

click me!