
தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் அனுமதி குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும், தேவைப்பட்டால் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கப்படும் எனவும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தி.நகர் பகுதியே புகை மண்டலாமாக கட்சி அளிக்கிறது. மேலும் சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள உஸ்மான் சாலை , மேம்பாலம் , உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
இந்நிலையில், சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆய்வு செய்தபின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீயை அணைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தீயை அணைக்க ஏற்படும் செலவுகளை கடை நிர்வாகத்தினர் தர வேண்டும்.
கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. கட்டிடம் தன்மையை ஆராய்ந்து பின்பு இடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
விதிமுறைகளின் படி தான் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தான் தெரியவரும்.
இந்த கட்டிடத்திற்கு தவறாக அனுமதி அளித்திருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறல் இருந்தால் கட்டடம் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அரசு துறைகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளன. ஸ்கை லிஃப்ட் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடை முழுக்க புகை மூட்டமாக இருப்பதால் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. இதுபோன்ற விபத்துகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகை மூட்டத்தால் தி.நகர் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ முகாம்கள் அமைக்கபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.