
தியாகராய நகரில் இருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க தீயணைப்பு துறையினர் கடந்த 11 மணி நேரமாக போராடி வருகின்றனர்.
அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்ட போதிலும், இதுவரை கட்டடத்திற்குள் மீட்பு படை வீரர்கள் செல்ல முடியாதபடி கரும்புகையுடன், தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
கட்டடத்தில் இருந்து வெளியேறும் நச்சுவாயுக்கள் மிகுந்த புகையால் தியாகராயர் நகர் திணறி வருகிறது. அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் உள்ளோர் வீடுகளை பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். கட்டடத்தில் துளையிட்டு அதன் வழியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கட்டடச் சுவர்கள் விரிசல் அடையாமல் இருப்பதற்காக நான்கு புறம் வழியாகவும் தண்ணீர் அடிக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான வெப்பத்தால் விரிசல் கண்டுள்ள சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே தரைத்தளத்தில் பற்றி எரிந்த வந்த தீயை மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். கட்டடத்தின் மற்ற தளங்களில் எரியும் தீயை அணைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.