விஸ்வரூபம் எடுக்கும் மாட்டுக்கறி விவகாரம் - என்னதான் நடக்குது ஐஐடி-யில்?

First Published May 31, 2017, 4:17 PM IST
Highlights
protest against beef in iit campus


மாட்டிறைச்சி திருவிழா நடத்திய விவகாரத்தில் ஆய்வு மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று ஐ.ஐ.டி. வளாகம் முன் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  மேலும், ஐஐடி வளாகத்தினுள் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.

மத்தியஅரசு சட்டம்

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.  இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எதிர்ப்பு

தமிழகத்தில் தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன.

மாட்டிறைச்சி திருவிழா
இந்நிலையில், கடந்த 28-ந்தேதி இரவு சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலர் மாட்டிறைச்சி  திருவிழா நடத்தி மாட்டிறைச்சி உண்டனர். இது தொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

தாக்குதல்

இந்த நிலையில் நேற்று நண்பகல் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற கேரளாவை சேர்ந்த மாணவர் சூரஜ்ஜை , ஏ.பி.வி.பி என்ற சங்பரிவார் ஆதரவு பெற்ற, வலது சாரி இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு அவர் ஏற்பாடு செய்ததாக இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

சிகிச்சை

இதில் தாக்கப்பட்ட சூரஜ் அம்பேத்கர் பெரியார் மாணவர்கள் பிரிவைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சூரஜ்ஜுக்கு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போராட்டம்

இந்த நிலையில் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி. வளாகம் முன்பு இடது சாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோரும், தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜும்  கலந்து கொண்டார். மாணவிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

மாணவர்கள் கைது
  மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பிக் கொண்டே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்த போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் மாணவர்களை கைது செய்ய முயன்ற போது மாணவர்கள்  எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.

முற்றுகை

இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஐ.ஐ.டி. வளாகத்தில் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் குவிப்பு

ஐ.ஐ.டி. வளாகம் முன்பு அடுத்தடுத்து நடந்த முற்றுகை போராட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பல அமைப்புகள் முற்றுகை போராட்டத்தால் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் ஐ.ஐ.டி. முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

டீன் பேச்சு

இதற்கிடையே ஐ.ஐ.டி. டீன் சிவக்குமார், மாணவர்களை மோதல் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள், தாக்கிய மாணவர்கள் தனித்தனியாக அழைத்து பேசினார்.

கோரிக்கை ஏற்க மறுப்பு

இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆய்வு மாணவர் சூரஜ் மருத்துவச் செலவை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், அதை ஏற்க டீன் சிவகுமார் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!