தடையை உடைத்து சீறிப் பாய்ந்த சல்லிக்கட்டு காளைகள்…

First Published Jan 14, 2017, 8:54 AM IST
Highlights

திருவண்ணாமலையில், சல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாய்ந்து உச்சநீதிமன்ற தடையை உடைத்தன.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் பொங்கல் பண்டிகையின் போது சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.

ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டம் வலிமைப் பெற்றும், பெருகிக் கொண்டும் வருகிறது. சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்து திருச்சி, மதுரை, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சமூக வலை தளங்கள் மூலம் இளைஞர்கள் பெரும் சக்தியாக ஒன்றிணைக்கப்பட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

மேலும் பல அமைப்புகள் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துவோம் என்று அறிவித்து, சல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம்புதூர், கிடாம்பாளையம், கடலாடி உள்ளிட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று நாள்கள் எருது விடும் திருவிழா நடத்துவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சல்லிக்கட்டு மற்றும் எருது விடும் திருவிழாவை, உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து நடத்தவிடவில்லை.

இந்த நிலையில் மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம்புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தடையை மீறி எருது விடும் விழா நடத்துவதென முடிவெடுத்தனர்.

அதன்படி வீடுகளில் வளர்க்கும் காளை மாடுகளை அலங்கரித்து, பூசைகள் செய்து நேற்று எருது விடும் திருவிழாவை நடத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர். இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு ஓடும் மாடுகளை கட்டித் தழுவ விரட்டிச் சென்றனர்.

தடையை மீறி எருது விடும் திருவிழாவை நடத்தி கலசபாக்கம் பகுதி மக்கள் மகிழ்ந்தனர்.

click me!