மன்னிப்பு கேட்கிறேன்... குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை விமர்சித்த பாஜக மத்திய அமைச்சர் பல்டி

Published : Mar 20, 2024, 06:37 AM IST
மன்னிப்பு கேட்கிறேன்... குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை விமர்சித்த பாஜக மத்திய அமைச்சர் பல்டி

சுருக்கம்

பெங்களூர் குண்டு வெடிப்பிற்கு தமிழர்கள் தான் காரணம் என பாஜக மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார். 

குண்டு வெடிப்பு- மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து

கர்நாடகாவில் ராமேஸ்வரம் கபேயில் கடந்த மாதம் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை என்ஐஏ போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில்,  கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “தமிழகத்தில் இருந்து வருபவர்கள் இங்கு (கர்நாடகா) வந்து பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூரு ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

பாஜக அமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்

அதில், "மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது போன்ற கருத்துகளை முன்வைப்பவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது இத்தகைய கூற்றுகளை முன்வைக்க அவருக்கு அதிகாரம் இல்லை. பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழ் மற்றும் கன்னட மக்கள் ஏற்கமாட்டார்கள்"  என குறிப்பிட்டி இருந்தார், இதே போல அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

எடப்பாடி கண்டனம்

தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய  கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்தநிலையில் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு ஷோபா கரந்த்லாஜே வெளியிட்டுள்ள பதிவில்,

 

மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்

எனது கருத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இருந்த போதும் எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எனது கருத்துக்கள் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள்  கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை நோக்கி மட்டுமே இருந்தது. எனவே என் இதயத்தின் ஆழத்திலிருந்து, நான் மன்னிப்பு கேட்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன் என மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

மத்திய அமைச்சர் ஷோபாவின் வெறுப்புப் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!