மதுவால் உயிர்பலி: திறனில்லாத திமுக அரசு - அண்ணாமலை காட்டம்!

Published : Jun 05, 2023, 01:08 PM IST
மதுவால் உயிர்பலி: திறனில்லாத திமுக அரசு - அண்ணாமலை காட்டம்!

சுருக்கம்

மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

வேலூர் மாவட்டம் சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலி தொழிலாளியான இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் (வயது 17), என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) என்ற மகளும் இருக்கின்றனர். பிரகாஷ் பிளஸ் 2 முடித்துள்ளார். விஷ்ணுபிரியா தற்போது நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

விஷ்னுபிரியாவின் தந்தையான பிரபு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த விஷ்ணுபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்த விசாரணையின்போது, சிறுமி விஷ்ணுபிரியாவின் வீட்டில் அவர் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தனது ஆசை அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனவும், தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக காணும் போதுதான் தமது ஆத்மா சாந்தியடையும் எனவும் சிறுமி உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

இதற்கு முன்பு கள்ளச்சாரயம் அருந்தி சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதேபோல், டாஸ்மாக் மதுவை குடித்து இரண்டு பேர் உயிரிழந்தனர். விசாரணையில் சயனைட் கலந்த மதுவை அவர்கள் குடித்ததாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தற்போது சிறுமியின் இந்த மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர், “தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்று அந்த வழக்கை, அதன் பின்னர் விசாரிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கைவிட்டுவிட்டது தமிழக அரசு. 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மது பாட்டிலுக்குள், பாசி மிதப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. 

 

 

இவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். 

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக, மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்துள்ளார்.  

ஆனால், இவற்றைப் பற்றிக் கவலையில்லாத திமுக, மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

என் ஆசை அப்பா குடிப்பதை நிறுத்தவும்... 16 வயது சிறுமி தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?” என பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!