அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு: என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைப்பு!

By Manikanda Prabu  |  First Published Oct 4, 2023, 4:43 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த கூட்டணி முறிவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே காரணம் எனவும் அக்கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் நிலையில், அண்ணாமலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். என் மண் என் மக்கள் நடைபயணம் பற்றி வழக்கமாக கொடுக்கும் ரிப்போர்ட்டை பாஜக தலைமைக்கு கொடுப்பதற்காக டெல்லி செல்கிறேன் என்று அண்ணாமலை கூறினார். 

Tap to resize

Latest Videos

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!

ஆனால், தமிழக நிலவரம், அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஏற்கனவே நிர்மலா சீதாராமனிடம் விளக்கமான அறிக்கையை பெற்ற பாஜக மேலிடம், அண்ணாமலையிடம் விளக்கம் கேட்கவே டெல்லிக்கு அழைத்ததாகவும், அதனடிப்படையிலேயே அவர் டெல்லி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. டெல்லியில் ஷா, கேபி நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்த அண்ணாமலை, நேற்று இரவு மீண்டும் சென்னை திரும்பினார்.

டெல்லி செல்வதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை கடிந்து கொண்ட அண்ணாமலை, டெல்லியில் இருந்து திரும்பியபோது,  பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. நிருபர்களை பார்த்த கையெடுத்து கும்பிட்டபடியே குட்-நைட் என்று சொல்லிவிட்டு அண்ணாமலை சென்றார். அவரது பதவி பறிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டெல்லியில் இருந்து அவர் திரும்பியபோது, இறுக்கமான முகத்துடனேயே இருந்தார்.

நமது மாநில தலைவர் திரு. அவர்களின் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை… pic.twitter.com/3irj0T65Zq

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இருமல், தொண்டை வலி, உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்து அடுத்த 5 நாட்களுக்கு மருந்துகள் கொடுத்திருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி பாதயாத்திரை மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் பாஜக தெரிவித்துள்ளது. அதேசமயம், திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு கட்ட யாத்திரை நிறைவடைந்துள்ளது.

click me!