
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் திமுக கூட்டணியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று உறுதியளித்தனர்.
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இபிஎஸ் சேர்க்க சம்மதம் தெரிவித்ததாகவும், ராமஸ்தாஸ், அன்புமணியை சமரசம் செய்து பாமகவை கூட்டணியில் சேர்க்க இபிஎஸ் உத்தரவாதம் அளித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இது தவிர முக்கிய விஷயமாக அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜகவுக்கு 23 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கும் என்றும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் தேதிமுக, அமமமுகக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
இதற்கிடையே விஜய்க்கு எதிராக தமிழக பாஜகவினர் யாரும் பேசக்கூடாது என்று பியூஸ் கோயல் நேற்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பாஜக கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் பாஜகவுக்கு எதிராக பேசினாலும் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என எங்கும் விஜய்யை தாக்கி பேச வேண்டாம் என பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் இந்த உத்தரவில் பல்வேறு பின்னணி காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதான் காரணம்
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக பக்கம் இருக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அடங்கிய சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதை விஜய் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக தலைமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர பாஜக பி டீம் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் குற்றம்சாட்டப்படும் விஜய் பாஜகவை விமர்சிப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.