நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 11ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர களப் பணியாற்றி வருகிறது. குறிப்பாக, இந்த முறை தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழ்நாடு வருகை புரிந்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் மோடி இரண்டு முறை தமிழகம் வந்து சென்றுள்ளார். மூன்றாவது முறையாக பிப்ரவரி 18 ஆம் தேதியன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.
இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 11ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். சென்னை வரும் ஜே.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிரதான கூட்டணி கட்சியாக அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. எனவே, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட இதர கட்சிகளை இணைத்து தேர்தல் களம் காண பாஜக முயற்சித்து வருவதாக தெரிகிறது. அதேசமயம், பெயரளவுக்கே, தேர்தல் வெற்றியை மனதில் வைத்தே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. தேர்தலுக்கு பிறகு அக்கட்சிக்கு அதிமுக ஆதரவளிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
இந்த பின்னணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சென்னை வருகை கவனம் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கும் ஜே.பி.நட்டா, அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டும் பேசவுள்ளார். பொதுக்கூட்டம் நடத்துவதற்காக, ஒய்எம்சிஏ மைதானம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.